மீண்டும் அவர்கள்

மழைபொழியக் கடமைப் படாதவை எனினும்
அழகாய் இருந்தன காலை மேகங்கள்.

பறக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன்
எழும்பினேன் வானில்
சிறகை விரித்து

புனித கோபுரக் கலசங்கள் சில
பறக்கும் எனது கால்களுக்கிடையில் பூமியில்.

சலனமற்ற மரங்களின்
முடிப்பந்தின் ஊடே ஒளிந்திருந்து
அவர்கள் சுட்டார்கள்
எங்கும் அமராத அந்த பறவை அதோ என்று

புகைக் கோலத்தை வானில் வரைந்து
நான் விழும்போது
அவர்கள் சென்றார்கள்
அன்றைய நாளின் பூரணம் கண்டு.

எங்கும் அமராத பறவை ஒன்றை உங்களப்பா
சுட்டு வீழ்த்தினார் இன்றைக் கென்று
அம்மாக்கள் குழந்தைகட்குக் கதை சொன்னார்கள்.

மண்ணில் கலந்து நீருடன் பழகி
நெடிய கடலை மறுநாள் அடைந்தேன்.

அலைகளடங்கிய நடுக்கடல் முழுவதும் அவர்கள்
என்னைத் தேடி யுகங்கள் போக்கினார்.
கடலைக் கொதிக்க வைக்காத சூரியன்
உச்சிக் கெழுந்ததைக் காணும் பொருட்டு அன்று
கரையைத் தீண்டினேன்.

ஆழ்கடலில் நீந்தி வந்தேன் அவர்கள் என்னை
கரையேறத் தொடங்குகையில் குழுவாய்க் கூடி
சுட்டார்கள் ஓயாமல் எனது
செந்நீரைக் கரைமணலில் அலை அலம்ப.

துப்பாக்கிகளை மீண்டும் தோளில் பூட்டி.
எந்தத் திசையை நோக்கிற்றாயினும்
துப்பாக்கிக் கழகு துப்பாக்கியே என்று
திரும்பிப் பார்த்து அவர்களில் ஒருவன் சொன்னான்.

வானில் சிரித்த நண்பகல் நாதனை
நானும் கண்டேன் நெருஞ்சிப் பூவாய்.

துப்பாக்கிக் குண்டால் சிதறிய உடம்பை
சமித்துப் போல சேமித்துக் கொண்டு மீண்டும்
வானில் எழுந்தேன்.

அன்றைக் கிரவு அவர்களின் காதலிகள்
கூடுதலாகக் கொஞ்சிக் களிக்கலாம் நானும்
எங்கும் அமராமல் எங்கும் பறப்பேன்
பள்ளமென்றாலும் பறப்பேன்
உயரமென்றாலும் பறப்பேன்

இறப்பென்றாலும் இறப்புக் கிடையில்
பறக்கை இனிது.

பறந்தேன் உயர உயர
துப்பாக்கிக் கோல்களை சுவரில் சாய்த்து
காதலிமாரைக் கையால் அணைத்துப்
பறவை கொன்ற பெருங்கதை பேசிக் களிக்கும்
அவர்களை வாழ்த்தி.

1973

Advertisements

Comments are closed.

%d bloggers like this: