காலி

ஒன்றும் அவனுக்குப் பெரிதல்ல
எதுவும் புனிதமும் அல்ல.
காலி கயவாளி மைதுனத்தில்
முடிக்கமுடியாமல் சிக்கிக் கொண்டவன்.

தந்தையைப் போக்கடித்தான்
தாயைக் கொலைசெய்து
கடல்நீரில் கைகழுவிக்
கப்பலிலே சென்று வந்தான்

போக்கடித்த தந்தைக்குத்
திவசம் தந்து
கொலைசெய்த தாயைக்
கள்குடித்து வசைபொழிந்தான்.

அவனுக்குத் தெரியாதது
ஒன்றும் கிடையாது.
நாற்றத்தை முள்ளை
நெருப்பைப் பிணைத்து
குதத்தி லிருந்து
தொண்டைக் குழிவரைக்கும்
வழிய நிரப்பிக்
காலி பவனி வந்தால்
கோயில் கடவுள்கள்
குலை நடுக்கம் கொண்டார்கள்.

தங்கள் கனவுகளில்
விடாமல் புகமுயலும்
அந்தக் குழியை அவன்
மாந்தர்க்குக் காட்டினான்
பார்த்திருந்த மனிதர்களைக்
கூசாமல் பின் குத்தினான்.

தெருவிளக்கில் கல்லெறிந்து
முன்னதாக வரும் இரவில்
அச்சத்தைக் கற்பழித்தான்.

மூடர்களின் கைகொண்டு
மலம் கழுவிப் புண்சொறிந்து
க்ரிடர்களின் கைகொண்டு
தாம்பூலம் தரத்தின்று
பிற்பகலின் மதிமயக்கின்
வானை அளந்து
இலகு தமிழில்
இனிக்கக் கவிபாடி
நாடெல்லாம் வீசினான்.

ஒருவரைப் பார்ப்பான்
அடுத்தவர்க்குப் பேச்சுவைப்பான்

யாருமவன் பேர்சொல்லிக்
கூப்பிட்டுக் கேட்டதில்லை
அவன் பேரைச் சொல்லாமல்
எல்லோரும் நன்கறிந்தார்

இன்றைக்கு மரக்கொம்பில்
தூக்கில் அவன் தொங்கிவிட்டான்.

தாளைக் கசக்கி
அதன்பிறகு தான் எழுதும்
அவன் வழக்கப் படி ஒரு நாள்
காலி அதில் பிழையின்றி
கைபடவே எழுதுகிறான்
‘ஊர்க்காரர் கோழைத்தனம்
என்னை அழுத்திற்று
இவர் நடுவில் என்னால்
உயிர் வாழ முடியாது’

ராஜா மந்திரி
தானைத் தளபதி
எல்லாமும் தானே
காலி கயவாளி
ரௌடி கில்லாடி
மாகதையின் சுருக்கமிது.
தொடர்ந்து வரும் காண்டத்தில்
அதன் விரிவைக் கூறுகிறோம்.

1974

Advertisements

Comments are closed.

%d bloggers like this: