மழைநாள் பாதை

August 4, 2006

மழை நாள்த் திவசம்
தாத்தாவுக்குத் தந்தை
செய்தது.

வீட்டுக் குள்ளே
பெரிய காலித்
தகர டப்பியில்
காற்றின் பேச்சு

கண்ணை மூடிக் கொண்டு
நடக்கும் பழக்கம் உள்ள நான்
ஆசாரத்தை அஞ்சி வீட்டின்
பின் பக்கம் வந்தேன்

கொல்லைச் சுவரின்
புராதன ஈரத்தில்
பளபளக்கும் சுவடு வைத்து
ஊர்ந்தது நத்தை ஒன்று

நத்தைக்குத் தெரியாதா
செங்குத்துச் சுவரென்று
மீண்டும் ஊர்ந்தது
மீண்டும் விழுந்தது

திவசச் சோற்றுக்குக்
காத்திருக்கும் தேவதைகள்
நத்தையைப் பிடித்துதள்ளி
விளையாடுகிறார்கள் பொழுது போக

இன்றும் திவசம்
மழைநாள்த் திவசம்

கடனுக்கும் பட்டினிக்கும் மான
பங்கத்துக்கும் கண்ணீர்
சுரக்காத தந்தை

குலுங்கி அழுது மனம் தேறி
புலன் அடங்கிய திருநாள்

தீ முன் அமர்ந்தேன்
தாத்தாவின் பெயரோடு
தந்தையின் பெயரைப்
பார்ப்பார் சேர்த்தார்

பாத்திரத் தண்ணீரை
மற்றொன்றுக்கு நான்
பாம்புக் கரண்டியால்
மாற்றி ஊற்றுகையில்
முற்றத்துச் சுவரில்
விரலே உடம்பாகி
அதுவே காலான ஒரு சின்ன நத்தை.

1978

Advertisements

ஆகஸ்டு 15

August 4, 2006

இரண்டு விரல்களுக்கிடையில்
எச்சிலைக் காறித் துப்பிய
ஒணசல் மனிதன்
நுகத்தடியில் தன்னை மீண்டும்
பொருத்திக் கொள்கிறான்

சிறிய காற்றுக்கும் பெரிதும் அசைந்தன
சிறு மரங்கள்

உலோகத் தட்டில் உணவை முடித்து
வீட்டுக்குள்ளேயே கையைக் கழுவி
மதியத் தூக்கத்தில் சிலபேர் தங்களை மறந்தனர்

வேம்பில் பழக் குலையை எட்டிப் பிடித்துக் காக்கைகள்
ஒற்றைப் பழத்தை ஈர்த்துச் சுவைத்தன

இடித்துக் கட்டப்படும் வீடுகள்
முக்கோண வட்டச் சிதறலாய்க் கவிழ்ந்து
மீண்டும் எழுந்தன விண்ணில்
குறுக்கு நெடுக்கு
வளைவில் நெடுக்கு நெடுக்கில் வளைவு
சதுர வட்டக் கோண மயக்கம்
தூண்கள்
தூணில் துளை
துளையில் புகை
கம்பிக் கதவுகள் எந்திரச் சங்குகள்
கட்டிட நிழலில் கார்களின் வரிசை

தணிந்த சூட்டுத்தூறல் நடுப்பகலில் நினைத்தேன்
ஆண்டுகள் முப்பதுக்கு கீழே ஒரு நாள்
கேள்விப்பட்ட விடுதலை என்னும் கட்டுக்கதை
கூடவே இன்னமும் தொடர்ந்து வளர்ந்து
ஒருநாள் மெய்யாய்த் துடிக்கக் கூடுமோ?

1978


என் உலகம்

August 4, 2006

என் உலகம் சிறியது
அங்கே
மூங்கில் ஆல் ஆன வேலி ஒன்றும்
அந்த வேலிஇல் இருக்கும் ஓணான் ஒன்றும்
உண்டு ;
குச்சிப் பூச்சியும் ஒன்றுண்டதிலே
வீட்டுக்கும் இல்லை;
வீட்டுப் பக்கம் வளர்ந்து
கனியாத மரத்துக்கும் இல்லை வேலி
வேலியைப் போட்டதும் நானில்லை

மரத்தைப் பற்றி கூறினேன் அல்லவா?

இன்னும் ஒன்றைச் சொல்லணும்

மரத்தின் கிளையில் தொங்கும்
கூடொன்றுண்டு. பழங்கூடு

இத்தனை சொன்ன பின் எனது
உலகம் எப்படிச் சிறிய தென்று
யாரேனும் என்னைக் கேட்கக் கூடுமோ

எனது உலகம் சிறியது

ஓணானும் குச்சிப் பூச்சியும்

வேலிப் படலில் காணாத போது நான்
கூட்டுக்குப் போய்விடுவேன்: ஏனென்றால்
அங்கே எனக்குச் சூரியன்
அந்தியைக் காட்டுவான் அணுவளவாக

1978


காலி

August 4, 2006

ஒன்றும் அவனுக்குப் பெரிதல்ல
எதுவும் புனிதமும் அல்ல.
காலி கயவாளி மைதுனத்தில்
முடிக்கமுடியாமல் சிக்கிக் கொண்டவன்.

தந்தையைப் போக்கடித்தான்
தாயைக் கொலைசெய்து
கடல்நீரில் கைகழுவிக்
கப்பலிலே சென்று வந்தான்

போக்கடித்த தந்தைக்குத்
திவசம் தந்து
கொலைசெய்த தாயைக்
கள்குடித்து வசைபொழிந்தான்.

அவனுக்குத் தெரியாதது
ஒன்றும் கிடையாது.
நாற்றத்தை முள்ளை
நெருப்பைப் பிணைத்து
குதத்தி லிருந்து
தொண்டைக் குழிவரைக்கும்
வழிய நிரப்பிக்
காலி பவனி வந்தால்
கோயில் கடவுள்கள்
குலை நடுக்கம் கொண்டார்கள்.

தங்கள் கனவுகளில்
விடாமல் புகமுயலும்
அந்தக் குழியை அவன்
மாந்தர்க்குக் காட்டினான்
பார்த்திருந்த மனிதர்களைக்
கூசாமல் பின் குத்தினான்.

தெருவிளக்கில் கல்லெறிந்து
முன்னதாக வரும் இரவில்
அச்சத்தைக் கற்பழித்தான்.

மூடர்களின் கைகொண்டு
மலம் கழுவிப் புண்சொறிந்து
க்ரிடர்களின் கைகொண்டு
தாம்பூலம் தரத்தின்று
பிற்பகலின் மதிமயக்கின்
வானை அளந்து
இலகு தமிழில்
இனிக்கக் கவிபாடி
நாடெல்லாம் வீசினான்.

ஒருவரைப் பார்ப்பான்
அடுத்தவர்க்குப் பேச்சுவைப்பான்

யாருமவன் பேர்சொல்லிக்
கூப்பிட்டுக் கேட்டதில்லை
அவன் பேரைச் சொல்லாமல்
எல்லோரும் நன்கறிந்தார்

இன்றைக்கு மரக்கொம்பில்
தூக்கில் அவன் தொங்கிவிட்டான்.

தாளைக் கசக்கி
அதன்பிறகு தான் எழுதும்
அவன் வழக்கப் படி ஒரு நாள்
காலி அதில் பிழையின்றி
கைபடவே எழுதுகிறான்
‘ஊர்க்காரர் கோழைத்தனம்
என்னை அழுத்திற்று
இவர் நடுவில் என்னால்
உயிர் வாழ முடியாது’

ராஜா மந்திரி
தானைத் தளபதி
எல்லாமும் தானே
காலி கயவாளி
ரௌடி கில்லாடி
மாகதையின் சுருக்கமிது.
தொடர்ந்து வரும் காண்டத்தில்
அதன் விரிவைக் கூறுகிறோம்.

1974


நாலு தலைக்காரன்

August 4, 2006

நாலு தலைக்காரன்
அற்புத நாக்குக்காரன்
நாலு தலைக்குள்ளும்
நாக்குகள் நான்கிருக்கும்
நாக்குகள் ஒன்றுக்குள்ளே
நல்லதாய்ப் பூவிருக்கும்
பூவுக்கு வாய்திறந்தால்
மெல்லிதாய்க் கானம் வரும்
நாக்குகள் ஒன்றுக்குள்ளே
வேறொரு பூவிருக்கும்
பூவுக்கு வாய்திறந்தால்
ஒரு மின்னல் பெண்மைகொள்ளும்
நாக்குகள் ஒன்றுக்குள்ளே
இன்னொரு பூவிருக்கும்
பூவுக்கு வாய்திறந்தால்
எங்கெங்கும் நானிருப்பேன்
நாலு தலைக்காரன்
அற்புத நாக்குக்காரன்
நாலு தலைக்காரன்
பூக்கிற நாக்குக்காரன்.

1974


எதை எடுத்துக் கூறுவது

August 4, 2006

எதை எடுத்துக் கூறுவது நீஙகள்
இடமொன்றைத்
தெரிவிக்க வேண்டுமென்றால்

ஆலமரம் ஒன்றுண்டு
அதற்கு நேரே
கிளைவிட்டுப் போகிறதில் தெற்கு நோக்கிப்
போகுமொன்றில் தொடர்ந்து செல்லக்
கிட்டும் என்போம்

கோலை நட்டுக் கட்டாத அச்சுத் தேர்க்கு
மேற்காகப் பிரிகின்ற தெருவில்
என்போம்

தோப்புகளின் தலைவிளிம்பு பொக்கைப் போரை
ஆனதற்குப் பக்கத்தில்
உள்ள தென்போம்.

இன்ன பொருள் இத்திசையில் அதற்குப் பக்கம்
இஃதிருக்கப் பாரென்று சொல்லக் கூடும்
எதை எடுத்து நான்கூற கேட்கப்பட்டால்
எல்லாமும் அழல் தின்னக் கொள்ளும் போது

1974


சூரியனுக்குப் பின்பக்கம்

August 4, 2006

யாரைப் பார்க்க உனக்காசை?
என்றால் உடனே
நான் சொல்வேன்:
அனைத்தும் வல்ல இராட்சதரை.

எதனால் என்றால்
அவரில் சிலரைக்
கனாப் பொழுதில் நான் கண்டேன்.

அவர்கள் தொகையால்
எண்ணற்று
ஒன்றாய்க் கூடி
சூரியனைப் பாறைகொண்டு தூளாக்கிக்
கையால் இழுக்கும் வண்டிகளில்
அடுக்கிக் கொண்டு சென்றார்கள்

எதற்காம் இந்தப் பாளங்கள் என்றேன்
சொன்னான் ஓரரக்கன்:
இன்றைக் கெங்கள் உணவுக்கு.

உடம்பும் பொலிவும் ஒரு சேரச்
சோரும் அந்தச் சூரியனை
அள்ளிக் கொண்டு பலர் சென்றார்
நெல்லைத் தூக்கும் எறும்பைப் போல்.

யாரைப் பார்க்க உனக்காசை?
என்றால் சொல்வேன்:
இராட்சதரை
எதனால் என்றால் சூரியனை
யார் இடித்தார் உணவுக்கு?

1974