தவளைகள்

(1)
தவளையின் கூச்சல் கேட்டுத்
தமிழ்க்கூச்சல் என்றான் கம்பன்
ஆயிரம் வருஷம் போச்சு
போயிற்றா தவளைக் கூச்சல்

மாதத்தில் ஒன்றைக்
கண்ணன்
மட்டுமா பிடிக்கும் என்றான்
தவளைக்கும் பிடித்த மாதம்
ஒன்றுண்டு பன்னிரண்டில்

குளத்திலே இலைத் தண்ணீரில்
குதூகலத் தவளைக் கூட்டம்
குதித்திடும் கூச்சல் போடும்
படித்துறை ஏறித்தாவும்

நீர்மட்டத் தளவு தோன்றித்
தாமதித்து நீரில் மீளும்
தவளையின் வயிற்றைப் பார்த்தால்
சந்தனக் கட்டி தோற்கும்

கண் மறைவாக எங்கோ
கதிரவன் தேர்க்கால் சிக்கி
உருள்கிற சப்தம் கேட்டுத்
தவளைகள் போலி செய்யும்

தவளைகள் இரவில் தங்கள்
சுகங்களை உரத்துப் பேச
அனைத்தையும் ஒட்டுக் கேட்டேன்
அப்புறம் உனக்கும் சொல்றேன்

(2)
கம்பனைக் கார்காலத்தைச்
சொல்லென்றேன் அவனும் சொன்னான்
ஏனெனில் தவளைப் பேச்சு
அடிபடும் கொஞ்சம் அங்கே

(3)
கொல்லையில் க்ராக் க்ராக் க்ராக் க்ராக்
“சாக்கடை மூடியாச்சா?”
படுக்கையில் அப்பா கேட்டார்

தூங்கிடும் சமயம்
சோம்பல்
எழுந்து போய் ஒன்று செய்ய

சிறுவர்கள் சொன்னோம். “ஆச்சு”
ஆதரித்து அம்மா
தானும்
ஆயிற்று என்றபோது
முற்றத்தின் நடுவில் க்ராக் க்ராக்

(4)
தவளைகள்
நன்றாய்ப் பார்த்தால்
தாவர ஜீவ்யக் காய்கள்
தவளைகள் பிடிக்கும்
இந்தத்
தவளைகள் ருசி அலாதி

(5)
சாப்பாட்டு சமயத்தில் மனைவியோடு
சச்சரவு பேய்க்கூட்டம் பிள்ளைக் கூட்டம்
கடன்தொல்லை ஒரு பிடுங்கி உத்தியோகம்
எல்லாமும் வெறுப்பேற்ற பிய்த்துக்கொண்டு
படிக்கட்டில் வந்தமர்ந்தான் சுப்பராமன்

“வீட்டுவரி கட்டலியா? இல்லையென்றால்
படிக்கட்டை அவன் பெயர்த்துப் போட்டுப் போவான்
இருவருக்கும் அவமானம்”
யாரோ சொல்லத்
தான் திரும்பிப் பார்க்கச்சே தவளைக்குட்டி

(6)
கொல்லையிலே என்ன சப்தம் என்றாள் அம்மா
போய்ப்பார்த்து வரச் சொன்னாள். இரவு நேரம்
சரியென்று நான் போனேன் லாந்தர் ஏந்தி
கொல்லையிலே ஒன்றுமில்லை சூனியம்தான்

திரும்பிவிடக் காலெடுத்து வைத்தபோது
தோள்மீது ஒரு குதிப்பு தள்ளப்பட்டேன்
கிசுகிசுத்துப் பலபேர்கள் சூழ்ந்து கொண்டார்
என்றெண்ணி நான் பார்த்தேன் தவளைக்கூட்டம்

ஒவ்வொன்றும் ஆளுயரம் முன்கால் தூக்கிப்
பின்காலில் நின்றிருக்கும் வயிறு மூட்டை
ஒவ்வொன்றும் விரகத்தால் என்னைத் தீண்டி
முத்தமிடக் கூச்சலிட்டு ஓடப்பார்த்தேன்

ஒருதவளை பாடிற்று. ஒன்றென் தோளைத்
தட்டிற்று. மற்றொன்று ஆடை நீக்கி
அதிசயமாய்த் தேடிற்று. கூச்சலிட்டேன்
அம்மாவின் காதுகளில் விழவே இல்லை.

1972

Advertisements

Comments are closed.

%d bloggers like this: