சொல்

March 31, 2008

எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல்
வெளியில் சொல்லும் பழக்கம் எனக்கு
நண்பன் ஒருவனோ நேரெதிர் இதற்கு

ஒன்றையும் சொல்ல மாட்டான் எதற்கும்
மௌனமாய் இருப்பதே அவன் வழியாகும்
பலரும் சொன்னோம்
‘சொல்லப்படுதலே என்றும் சிறந்தது’
அதற்குப் பிறகும் அவன் சொல்லவில்லை.
நாங்கள் வியந்தோம்.

இறக்கும் பொழுதும் சொல்ல மாட்டானா
ஒருநாள் அவனும் இறந்தான்
கட்டைப் புகையிலை போல அவன்
எரிந்ததைப் பார்த்துத்

திரும்பும் பொழுது தெருவில் வெயிலில்
சேவல் கூவிற்று ஒருமுறை விறைத்து.
வழக்கம் போல நான் சொன்னேன்.
‘புலர்ந்தற் கப்புறமும் கோழிகள் கூவும்’

1981

என்ன மாதிரி

March 31, 2008

என்னை நோக்கி ஒருவர் வந்தார்
எதையோ கேட்கப் போவது போல

கடையா? வீடா? கூடமா? கோயிலா?

என்ன கேட்கப் போகிறாரென்று
எண்ணிக் கொண்டு நான் நின்றிருக்கையில்

அனேகமாய் வாயைத் திறந்தவர் என்னிடம்
ஒன்றும் கேளாமல் சென்றார்.

என்ன மாதிரி உலகம் பார் இது.

1981


காட்சி

March 31, 2008

வரப்பு
காக்கிப் பயிர்
கம்பி குத்தி
நெட்டைக் கம்பம்
கேடயம்
வாள்
குறுக்கில் விரையும் பறவை
உதைக்கும் சப்தம்
சப்தத்தில் பூமி
ஒரு மீசை
பூசப்பட்ட வானம்
நகராத புரவி
நகர்ந்து போன பகை
நெல்லுப்பயிர்
கள்ளு குடி
குளத்துப்படிக்
கட்டில் வெட்டுப்
புண்ணில் சொட்டு
ஸ்வஸ்தி ஸ்ரீ
ராஜாதி ராஜர்க்கு
யாண்டு…
யாண்டு?
அல்லிப் பூவில்
ரத்தக கறை
சூரியனின்
சேப்புத் தலை
தோப்பு
தெம்மாங்கு
தலை முழுகிய
தண்ணீர்
அலை இடி
அலை இடி
அலை
தலை
அலை
தலை
அலை
தலை
அலை
பொம்மைக் குதிரை
ஆசைப்பட்டுக் கனைச்சு
வர்ணம் உதிர்ந்து போச்சு

1981


திணை உலகம்

March 31, 2008

(1)
எருமைகள் சாணம்போட
குருவிகள் எச்சம்போட
உருப்பெரிய எலிகள் முன்பே
விருந்துண்டு இல்லம் ஏக
முழங்குறைத் தளக்கும் கையாள்
முல்லைப் பூ கூவக் கேட்டுக்
கிருதயுகம் எழுந்ததம்மா
என் கனவைக் கீறிக்கொண்டு.

(2)
உலகத்தோடொட்டி
யொழுகியொழுகிப்
பலபெற்றோம் இன்னும் உள.

(3)
இன்னும் சிலநாள் அப்புறம் பலநாள்
ஆயினும்
வரத்தான் போகிறது அந்நாள்
விண்குதித்த
சின்னப் பறவைகளின்
பறக்குங்கால் எடுக்குங்கால்
பூளைப் பூகிழியும் நாள்.

1981


உள்ளும் புறமும்

March 31, 2008

உள்ளும் புறமும்
ஒருங்கே தெரிய
ஒன்றிருப்பது அழகுதான்.
மற்றவை யெல்லாம்
உள்ளும் புறமும்
தனியே தெரிய இருக்கும் பொழுது.

எந்தப் பொருளின்
முடிப்பாகமோ
அடிப்பாகமோ
உள்ளும் புறமும்
ஒருங்கே தெரிய
இருக்கும் இப்பொருள்?

ஒன்றையும் காணாமல்
உள்ளும் புறமும்
தெரிய பொருளின் ஊடு
உலகைப் பார்த்தேன்
உலகம் கோமாளி ஒருவனின் மீசையாய்
நகர்கிறது பக்கவாட்டில்.

1981


தெரு

March 31, 2008

எல்லாத் தெருக்களையும் போலவே எனதும்
இரண்டு வரிசை வீடுகளுக் கிடையில் அமைந்தது
பிள்ளைப் பருவத்திலிருந்து இன்று வரைக்கும்
அதன் மேல் நடக்காத நாளொன்று கிடையாது
தெருவில் அதிக மாற்றமும் இல்லை
இரண்டு தென்னைகள் அகற்றப்பட்டன
பச்சைப் புல்லின் புதர்கள் இப்போது
இடம்மாறித் தெருவில் வளர்ந்து வருகின்றன
தெருவை நான்காய்ப் பிரித்தால் முதலாம் பகுதியில்
அமைந்ததென் வீடு பழசு ஓடு சரிந்தது
எடுப்பிலேயே வீடிருந்ததால்
தெருவை முழுக்க வயதான பிறகு
ஒருமுறைகூட நடந்து பார்க்கவில்லை.
ஒன்றிலிருந்து திரும்பிய பிறகே
எல்லாத் தெருக்களும் அடைவதாய் இருக்கும்
எனது தெருக்குள் நுழையும் முன்பு
ஒரு கணம் நிற்பேன். தெருவைப் பார்ப்பேன்
தொலைவில் விளையாடும் எனது பிள்ளைகள்
என்னைக் கண்டதும் ஓடி வராதிருந்தால்
வீட்டின் வாசலில் மனைவி காத்திருக்கா திருந்தால்
வீட்டுக் கெதிரில் அந்நியர் ஒருவரும்
வெறுமனே நின்று கொண்டில்லாமல் இருந்தால்
நடையில் வேகம் கூட்டிச் செல்கிறேன்
பிள்ளைகளை வீட்டுக்கு வருமாறு பணிக்கிறேன்
உள்ளே யுகாந்திரமாகப் பழகிய இருளை
அமைதியாகத் தீண்டிக் கொண்டே
அவளைப் பெயர் சொல்லி அழைக்கிறேன்
வெள்ளைப் பல்லியை நகரச் செய்து
விளக்குத் திரியைச் சற்றுப் பெரிதாக்குகிறேன்
முற்றத்துக்கு வந்து நின்று கொண்டு
வாசல் படிக்கப்பால் தெரியும் தெருவை
என்னுடன் மனைவியும் பார்க்கப் பார்க்கிறேன்
சின்னதாய்த் தெரிகிறது தெரு.

1981


பாலை

March 6, 2008

வெளுக்கத் துவைத்து முதல் நாள் வெயிலில்
உலர்த்தி எடுத்த வண்ணச் சீருடை
அனைத்தும் கொண்டு கந்தலை நீக்கி
பூசைப்பசு கோயிலுள் நுழையுமுன் விழித்துக்
காலை குடிக்கும் பால்கொணர்ந்து வைத்து
விடியற் பறவைகள் ஒருசில கூவ
வந்தேன் என்றாள் வராது சென்றாள்
யாருடன் சென்றாள் அவரை ஊரார்
பலரும் அறியத் தானறியா மடச்சி
உருக்கி ஊற்றும் சாலைக் கரும்பிசின்
எஞ்சின் உருளைக் கலன்கள் சிதறி
நடப்பார்க் கெளிதாய் வெண் மணல் தூவி
மதியச்சோறு நெடுங்கிளைப் புளியின்
நிழலில் உண்போர் அவரைக் கேட்கவோ
கரையிற் செல்வோர் நிழல் கண்டஞ்சி
சேற்றில் ஒளியும் மீன்நீர்க் குளங்கள்
போகப் போகக் குறையும்
ஆகாச் சிறுவழி அது எது என்றே.

1981